பாகிஸ்தான் தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் சிறப்பாகச் செயல்படுவதாக அமெரிக்கா நற்சான்று வழங்கியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாகப் பாகிஸ்தான் – அமெரிக்கா பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இது தொடர்பாக இருநாடுகள் தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க இருநாடுகளும் உறுதியுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் விடுதலை படை, ஐஎஸ்ஐஎஸ், தெஹ்ரிக் – இ - தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்குத் திட்டமிட்ட பேச்சுக்கள் மிக முக்கியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர் வெற்றி பெற்றிருப்பதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது.