சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியா 4வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..
ஆங்கிலேயர் வருகைக்கு முன், உலகின் பெரும் பணக்காரத் தேசமாகப் பாரதம் விளங்கியது. 1700ம் ஆண்டில், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 24.4 சதவீதமாக இருந்தது. விடுதலையின் போது, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு வெறும் 4.2 சதவீதமாக இருந்தது.
1765ம் ஆண்டு முதல் 1900ம் ஆண்டு வரையில் சுமார் 64.82 டிரில்லியன் டாலர்களைப் பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றதாக ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை கூறுகிறது.
தேசப் பிரிவினையில், இந்தியாவின் மொத்த பொருளாதாரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ,அதில் ஒரு பகுதி பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. 1947-ல் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியாவும், பாகிஸ்தானும் இருந்தன.
1961 மற்றும் 1980 ஆண்டுகளுக்கு இடையில், சுமார் ஆறு சதவீத வளர்ச்சியுடன் பாகிஸ்தானும், நான்கு சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவும் இருந்தன. கிழக்கு பாகிஸ்தானின் வர்த்தகத்தாலும், அமெரிக்காவின் பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியாலும், மேற்காசிய இஸ்லாமிய நாடுகளிடமிருந்து பெற்ற நன்கொடைகளாலும் பாகிஸ்தான் வளர்ச்சி அடைந்தது.
தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக 1990ஆம் License-Permit Quota சிஸ்டத்தை இந்தியா நீக்கிய பிறகு இந்தியா ஆண்டுதோறும், சராசரியாக எட்டு சதவீத வளர்ச்சியில் வேகமாக முன்னேறியது. இன்னொருபுறம் பாகிஸ்தான் கடுமையாகத் தடுமாறத் தொடங்கியது.
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமான இந்தியா, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்,ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் 0.37 டிரில்லியன் டாலர் கொண்ட பாகிஸ்தானின் பொருளாதாரத்தை விட 10 மடங்கு அதிகமாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.88 டிரில்லியன் டாலராக உள்ளது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விடப் பாகிஸ்தானின் தனிநபர் வருமானம் 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. வரத்தகத்தைப் பொறுத்தவரை, பாகிஸ்தானை விட 17 மடங்கு அதிகமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 688 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கிறது. அதேநேரம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு 15 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே உள்ளது.
உலகின் நான்காவது வலிமையான ராணுவ சக்தியாக இந்தியா விளங்குகிறது. அதே பட்டியலில் 12வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. இராணுவத்துக்காக 86.1 பில்லியன் டாலர் செலவு செய்து, உலகின் ஐந்தாவது பெரிய இராணுவச் செலவு நாடாக இந்தியா உள்ளது. 2024 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 2.3 சதவீதமாகும்.
அதே ஆண்டு, இராணுவத்துக்காக 10.2 பில்லியன் டாலரைப் பாகிஸ்தான் செலவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதம் ஆகும். முப்படை வீரர்கள் கணக்கிலும், ஆயுதத் தளவாடங்கள் வகையிலும் பாகிஸ்தானை விட இந்தியா மும்மடங்கு அதிக எண்ணிக்கையுடன் முன்னணியில் உள்ளது.
விளையாட்டுத் துறையில் குறிப்பாக கிரிக்கெட்டில், இந்தியா- பாகிஸ்தான் போட்டி இருநாடுகளில் மட்டுமின்றி,உலக அளவிலும் கூர்ந்து கவனிக்கப்படும். கடந்த பிப்ரவரியில், துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இந்தியா பாகிஸ்தான் போட்டியை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 20.6 கோடி பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் கண்டு களித்தனர். இது உலகக் கோப்பை போட்டிகளைத் தவிர்த்து, வரலாற்றில் இரண்டாவது அதிகம் பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ஆகும்.
140 கோடி மக்கள் தொகையுடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், கடந்த மக்களவை தேர்தலில், சுமார் 95 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கவைத்தனர். இது உலக மக்கள்தொகையில் எட்டில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் பாகிஸ்தானில் ஜனநாயகம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. பலமுறை இராணுவ ஆட்சி நடந்துள்ளது. தேர்தல் நடைமுறை இருந்தாலும், பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரம் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
ஒரே நாளில் சுதந்திரம் பெற்றாலும் எட்ட முடியாத உயரத்தில் இந்தியா வீறுநடை போடுகிறது. பாகிஸ்தான் வீம்புக்கு இந்தியாவுடன் போட்டிப் போட கூட தெம்பில்லாமல், பொருளாதார நெருக்கடியில் தம் மக்களுக்கு உணவு கூட கொடுக்க முடியாத நிலையில் பரிதாபமாக இருக்கிறது.