1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர இந்தியாவை உலகமே சந்தேகத்துடன் தான் பார்த்தது. நீண்ட காலமாக அடிமைப் பட்டுக் கிடந்த நாடு, இனி ஒரு சுதந்திர நாடாக எப்படி இருக்கப் போகிறது?
புதிதாக சுதந்திரம் பெற்ற நாடு, உலக ஒழுங்கின் கடுமையான நிலைமைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், உலகமே வியக்கும் வண்ணம், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக, ஒரு வல்லரசாக இந்தியா நிமிர்ந்து நிற்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
விடுதலைக்குப் பின் தேசத்தின் தேவைகள் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் தன் சொந்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா உருவாக்கத் தொடங்கியது. முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் பாதையை அணிசேரா கொள்கை என வகுத்தார். 2014 ஆம் ஆண்டு வரை, மற்ற இந்தியப் பிரதமர்களும் இந்த கொள்கையையே பின்பற்றினார்கள்.
இதன் பின்னணியில், கொரியப் போரின் போது அமைதியை ஏற்படுத்த இந்தியா முயன்றது. புதிய கம்யூனிஸ்ட் சீனாவின் உலகளாவிய அங்கீகாரத்துக்காக இந்தியா முதல் குரல் எழுப்பியது. மேலும், சூயஸ் நெருக்கடியின் போது எகிப்து மீதான முத்தரப்பு ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்குத் தார்மீக கௌரவத்தையும் “நீதியின் குரல்” என்ற பெயரையும் பெற்றுத் தந்ததே ஒழிய இந்தியாவுக்குப் பாதுகாப்பை வழங்கவில்லை. 1962-ல் சீனாவும் 1965-ல் பாகிஸ்தானும் இந்தியாவின் மீது போர் தொடுத்தது. சீனாவுடனான போர் அவமானத்தைத் தந்தது. ஆனால், பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றிப் பெற்றது.
இந்தக் காலகட்டத்தில்,குறிப்பாக,1955 முதல் 1965 வரையிலான 10 ஆண்டுகள், இந்தியா வெளிநாட்டு நிதி உதவியைச் சார்ந்திருக்கும் நிலையில் இருந்தது. அமெரிக்காவின் நிதியுதவியை நம்பியிருக்கும் இந்தியா, வியட்நாம் போரில், அமெரிக்காவின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
1970களில் பசுமைப் புரட்சியால் உணவில் நாடு தன்னிறைவைப் பெற்றது. 1971 ஆம் ஆண்டு, சோவியத் யூனியனுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்தியப் பொருட்களை வாங்குவதில் இரண்டாவது பெரிய நாடாக மாறிய சோவியத் யூனியன், கனரக தொழிற்சாலைகளை அமைப்பதிலும், அதிநவீன இராணுவ உபகரணங்களை வழங்குவதிலும் இந்தியாவுக்கு உதவியது. கூடுதலாகக் காஷ்மீர் பிரச்சினையில் ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைச் சோவியத் யூனியன் எடுத்தது. பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெறவும், வங்கதேசம் உருவாக்கவும் சோவியத் யூனியன் துணை நின்றது.
1975-ல் சோவியத் ராக்கெட்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.இதற்கு அடுத்த 10 ஆண்டுகள்,இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் செழித்து வளர்ந்தன. 1985-ல் தென்கிழக்கு ஆசியாவில் ஆசியான் அமைப்பைப் போலவே, தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புக்காக சார்க் அமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தியதும், இந்திய அமைதிப்படையை அனுப்பியதும், பிறகு 1990-ல் அமைதிப்படையைத் திரும்பப் பெற்றதும், இந்தியாவின் ராஜதந்திரத்தில் மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாகும். பனிப்போர் முடிவுக்கு வந்தது. உலக அரசியல் களம் மாறியது.1991-ல் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை உலகப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்க வைத்தது.1992-ல் இந்தியா கிழக்கு நோக்கிய கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டில், இந்தியா இஸ்ரேலுடன் பகிரங்கமாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது.
1998-ல் அணுசக்தி சோதனைகளை வெற்றிகரமாக நடத்திய இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. பிறகு, மும்பையில் பயங்கர வாத தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல் இந்திய-அமெரிக்க உறவுகளை மீட்டெடுத்தது.
தொடர்ந்து, 2006-ல் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கின. 2010-ல் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் , ஜப்பான், தென் கொரியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. 2014 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி, வெளியுறவுக் கொள்கையைப் பன்முகத்தன்மையை நோக்கித் திருப்பியுள்ளார். தேசம் முதலில் என்ற அடிப்படையில், பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜதந்திரம் அமைந்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முக்கிய பங்காற்றுகிறது. அமெரிக்காவுடன் குவாடில் பங்கேற்கிறது, சீனா,ரஷ்யாவுடன் இணைந்து பிரிக்ஸை ஏற்படுத்தி செயல் படுத்துகிறது. G7 நாடுகளுடன் சேர்ந்து கொள்கிறது. உலகளாவிய தெற்கை முன்னின்று வழிநடத்துகிறது.
சர்வதேச நாடுகளுடன் தான் தேவைக்கு, இந்தியா லாபகரமான வர்த்தகத்தைச் செய்கிறது. ஈரானில் துறைமுகங்களைக் கைப்பற்றுகிறது. ரஷ்யா,பிரான்ஸ், இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை வாங்குகிறது. ஆர்மேனியா அமெரிக்கா பிலிப்பைன்ஸ் க்கு ஆயுதங்களை விற்கிறது. உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் பேசுகிறது.
இப்படியெல்லாம் இந்தியா ராஜநடை போடுவதற்கு,எல்லா விஷயங்களிலும் நாடு தன்னிறைவுடன் விளங்குவது தான் காரணமாகும். வெளிநாட்டு நிதியை நம்பியிருக்காத இந்தியா 65 நாடுகளுக்கு மேல் சுமார் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உதவி செய்துள்ளது. கோவிட் காலத்தில்,உடனடியாக 160 நாடுகளுக்குத் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. சர்வதேச அளவில், இயற்கை பேரிடர் தொடங்கி, கடற்கொள்ளையர் தாக்குதல்கள் வரை எந்த பிரச்சனைக்கும், இப்போதெல்லாம் இந்தியாவே முதலில் உதவிக்கரம் நீட்டுகிறது.
இயற்கையாகவே மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையேயும், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையேயும் ஒரு நட்பு பாலமாக இந்தியா அமைந்துள்ளது. அதிலும், விஸ்வாமித்திரனாகப் பிரதமர் மோடி செயல்படுவதால், இந்தியா விஸ்வ குருவாக அனைத்து நாடுகளுக்கும் வழி காட்டுகிறது.