விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் 22ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் தியாகிகளை போற்றுவோம் எனக் கூறினார்.
தமிழகத்தின் வளர்ச்சி கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் உள்ளதாக கூறிய அவர், தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கட்டபொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றல் பெறும் மாதாந்திர ஓய்வூதியம் 11ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், 2ஆம் உலகப்போரில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கு மாதாந்திர நிதியுதவி 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் கூறினார்.
மேலும், 2ஆம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர நிதி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் 33 ஆயிரம் சதுரஅடி பரப்பில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதி அமைக்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயணம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.