ஜம்மு காஷ்மீர் கிஷ்துவார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு, குண்டு வீசியதை போன்ற பெரும் சத்தத்தை எழுப்பியதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தெரிவித்துள்ளனர்.
கிஷ்துவாரில் இருந்து 90 கி.மீ., தொலைவில், 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டியது.அங்கிருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்கு செல்ல சோசிட்டி கிராமத்தில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த கோர சம்பவத்தில் சிக்கி 60 பேர் உயிரிழந்த நிலையில், மாயமானோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் பயத்துடனே காணப்படுகின்றனர்.
அதில் பெண் ஒருவர் அளித்த பேட்டியில், மேகவெடிப்பா? அல்லது வெடிகுண்டு தாக்குதலா? என்பது புரிவதற்குள்ளாகவே அனைத்து அசம்பாவிதமும் அரங்கேறி விட்டதாகக் கவலையுடன் தெரிவித்தார்.