இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில், இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.
நீல நிறத்தில் முழு நீள ஹைட்ரஜன் ரயில் பற்றிய வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் இணைத்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். ஹைட்ரஜன் ரயிலில் உள்ள அம்சங்களை படம்பிடித்துக் காட்டும் அந்த வீடியோ Coming soon என்று முடிகிறது.
இதன் மூலம், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது என்றும் ஹிண்ட் கொடுத்திருக்கிறார் அவர். கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பாரம்பரிய நகரங்களுக்கு ஹைட்ரஜன்” என்ற திட்டத்தின்கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அவரது அறிவிப்பு செயலாக்கம் பெற்ற நிலையில், அண்மையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது சென்னை ஐசிஎப் தொழிற்சாலை.
136 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரஜன் ரயில் திட்டம், ஜீரோ கார்பன் உமிழ்வு நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலக்குகளை இந்தியா விரைவில் எட்ட உதவும்.
தற்போது பரிசோதனை நிலையில் உள்ள ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலம் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 2600 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இரண்டு வழித் தடங்களில் நாள்தோறும் 356 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்காக ஜிந்த் நகரில் 3000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் வகையிலான ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில், இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.
மேற்கண்ட நாடுகள் 500 முதல் 600 குதிரைத்திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கியிருந்தாலும், இந்தியா ஆயிரத்து 200 குதிரைத்திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கியிருப்பது, ரயில்வே உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.