கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த தினம் சிறப்புக்குரியது. ஆண்டுதோறும் ஆவணி மாத தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாள்தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி கோயிலில் அதிகாலை மங்கல ஆரத்தி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள பிரேம் பிரதிக் கோயிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த் தேவ் ஜி கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ராதையுடன் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெய்ந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணரும், ராதையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இஸ்கான் கோயிலில் கீர்த்தனை, நீராட்டு விழா நடைபெறவுள்ளதாக இஸ்கான் அமைப்பின் வங்கதேச பொதுச்செயலாளர் சாரு சந்திரதாஸ் பிரம்மாச்சாரி தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேச அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.