நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் என, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இல.கணேசனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதெல்லாம் சாதாரண வார்த்தைகளாகத்தான் இருக்கும் என்றும், பாஜக தலைவர்கள் உருவாவதற்கு இல.கணேசன்தான் காரணம் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தாமரையை மலர வைத்தது மட்டுமின்றி, பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், நல்ல பேச்சாளரும், எழுத்தாளருமான இல.கணேசனின் ஆன்மா சாந்தியடை இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார்.