ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார் மும்பையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர்.
வாடாலா பகுதியில் வசிக்கும் 71 வயதுமிக்க மூதாட்டி ஒருவர் ஆன்லைன் டெலிவரி ஆப்-இல் பால் ஆர்டர் செய்ய முயன்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த குறிப்பிட்ட பால் நிறுவனத்தின் பெயரில் தீபக் என்பவர் மூதாட்டியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பால் ஆர்டர் செய்ய உரிய விவரங்களைத் தரவேண்டும் என்று பேசிய அந்த நபர் லிங்க் ஒன்றையும் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
மூதாட்டியும் அவரது பேச்சை நம்பி, அதில் கேட்கப்பட்ட விவரங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில், மூதாட்டி வைத்துள்ள 3 வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதைக் கண்டு அதிர்ந்த மூதாட்டி, உடனடியாக காவல்துறையின் உதவியை நாடி இருக்கிறார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மூதாட்டியின் செல்போனுக்கு வந்த அழைப்பு எங்கிருந்து வந்தது, லிங்க் அனுப்பியவர் யார் என்று விசாரணையைத் தொடங்கி இருக்கின்றனர். ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தும் போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.