அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான தனது அலாஸ்கா சந்திப்பின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ரஷ்ய அதிபர் புதின், சுதந்திரமான நாடு என்கிற நிலையிலிருந்து உக்ரைனை அகற்றுவது என்ற தனது நோக்கத்தையும் உலகநாடுகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அலாஸ்கா சந்திப்பைத் தனக்கான வெற்றியாக புதின் மாற்றியது எப்படி? என்பது பற்றி விரிவாக இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் சந்தித்துக் கொண்டனர். இதுவே, ரஷ்யாவை அமெரிக்கா அங்கீகரித்தற்கான சான்றாகும். இதன்மூலம், ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் மேற்கு உலக நாடுகளின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் புதின்.
அலாஸ்காவில் தனது சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய புதினுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்பு கம்பளத்தில் புதின் நடந்து வந்த போதே, காத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றார். தனக்காகக் காத்திருந்த ரஷ்ய அதிபருக்கான காரை விடுத்து, அமெரிக்க அதிபருடன் அவரது காரிலேயே சந்திப்பு நடக்கவிருந்த இடத்துக்குப் புதின் சென்றது உலகநாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பேச்சுவார்த்தைக்கு முன், பத்திரிகையாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளையும் புறக்கணித்த புதின் புன்னகைத்தப் படியே சென்றார். மூன்று மணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு ட்ரம்பும், புதினும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். வெள்ளை மாளிகை நடைமுறைக்கு மாறாக, எந்த வித முன்னுரையும் தருவதற்கு முன்பாகவே, முதலில் புதின் பேசத் தொடங்கினார்.
ட்ரம்பை அண்டை நாட்டவர் என்று அழைத்த புதின், குறிப்பாக 5 விஷ்யங்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அதே நேரம் உறுதியாகவும் எடுத்துச் சொன்னார். அமெரிக்காவும் ரஷ்யாவும் “கடல்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும், நெருங்கிய அண்டை நாடுகள்” என்று புதின் குறிப்பிட்டார்.
ரஷ்ய- அமெரிக்க உறவுகள், பனிப்போருக்குப் பிறகு மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டன என்று குறிப்பிட்ட புதின், நீண்ட காலமாக தாமதமாகி போன ஒரு சந்திப்பு என்றார். மேலும், இது இருநாடுகளும் பழைய பக்கங்களைப் புரட்டி விட்டு, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய காலமிது என்றும் குறிப்பிட்டார்.
போரைப் பற்றிப் பேசாமல், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதிலேயே புதின் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ட்ரம்ப் அதிபராக இருந்திருந்தால், இந்தப்போரே தொடங்கப்பட்டிருக்காது என்று கூறிய புதின், தனது நாட்டின் நலனில் அக்கறை கொண்டுள்ள ட்ரம்ப், அதே நேரத்தில் ரஷ்யாவுக்கும் அதன் சொந்த நலன்கள் இருப்பதைப் புரிந்துகொள்வதாக புதின் கோடிட்டுக் காட்டினார்.
போரை நிறுத்தவேண்டும் என்றால், உக்ரைன் போருக்கான அனைத்து மூல காரணங்களும் நீக்கப்பட வேண்டும் என்று கூறிய புதின், எந்தவொரு அமைதி உடன்படிக்கைக்கும் ரஷ்யாவின் முன்நிபந்தனைகளைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் அமைதி ஏற்படும் சூழலில், திரைக்குப் பின்னால் நின்று எந்த சூழ்ச்சியும் செய்யக் கூடாது என்றும், நேட்டோ நாடுகளும் புதிய முன்னேற்றத்தைச் சீர்குலைக்காது என்று நம்புவதாகவும் ட்ரம்பை வைத்துக் கொண்டே புதின் உறுதியாகத் தெரிவித்தார்.
விரைவில் மீண்டும் சந்திப்போம் என்று ட்ரம்ப் கூறிய போது, அடுத்து மாஸ்கோவில் என்று பதில் அளித்து ட்ரம்பைத் திணறடித்தார் புதின். அதாவது, ரஷ்யாவைத் தவிர வேறு எங்கும் அடுத்த சந்திப்பை நடத்த விரும்பவில்லை என்பதையும் புதின் சுட்டிக் காட்டியுள்ளார்.
உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதே, போருக்கான மூலக் காரணம் என்றும், அதை நீக்குவது தான் அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் உறுதியாக புதின் தெரிவித்துள்ளது அவரின் ராஜ தந்திரத்தையே காட்டுகிறது. தன்னை அமைதி தூதராகக் காட்டிக் கொள்ளும் ட்ரம்ப், அமெரிக்காவில் இருந்து நீண்ட தூரத்தில் இருக்கும் அலாஸ்காவுக்குப் பயணித்து, புதினைச் சந்தித்து, எந்த ஒப்பந்தமும் இல்லாமல் திரும்பி இருக்கிறார்.
ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்றால், மேலும், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்த ட்ரம்ப், பலமுறை போர் நிறுத்தத்துக்கான காலக்கெடுவும் கொடுத்திருந்தார். ஆனாலும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை. புதினை போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ட்ரம்பால் சம்மதிக்க வைக்க முடியவில்லையா ? அடுத்து என்ன நடக்கும்? உக்ரைனில் அமைதி ஏற்படுமா ? என்பது குறித்த எந்த பதிலும் ட்ரம்பிடம் இல்லை.
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதே தனது அடுத்த திட்டம் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், விரைவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸகியை அமெரிக்காவில் சந்திக்க உள்ளார்.