திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூட்டம் அலைமோதியதால், நூறு ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்து பக்தர்கள் அனைவரும் பொதுதரிசன வழியில் அனுமதிக்கப்பட்டனர்.
வார விடுமுறை தினங்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இதற்கிடையே கிருஷ்ண ஜெயந்தி, ஆடி கிருத்திகை இவற்றையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூருக்கு வருகை தந்தனர்.
கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் நூறு ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்த கோயில் நிர்வாகம், அந்த வழியாக இலவச தரிசனத்திற்கு அனுமதித்தது. இதன் மூலம் பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் ஆடிக்கிருத்திகையை ஒட்டி, காவடி எடுத்து வந்த பக்தர்கள், ரத காவடியை ஒருவர் மாற்றி ஒருவர் தோளில் சுமந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.