நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் கிட்னியை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், கல்லீரல் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவரை பிரிந்து, மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர், குடும்பத்தை நடத்த, அதிக வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அவரின் வறுமையைத் தெரிந்து கொண்ட புரோக்கர் ஒருவர், மூளைச்சலவை செய்து, கிட்னி விற்றால் கடனை அடைத்து விடலாம் என்று கூறி சென்னை அழைத்து வந்துள்ளார். அங்கு, பரிசோதனை முடிவுகள் ஒத்து வராததால், அவரது கிட்டிக்குப் பதிலாகக் கல்லீரலை எடுத்துள்ளனர். இதனையடுத்து, கல்லீரலை தானமாகக் கொடுத்த பேபிக்கு 8 லட்ச ரூபாய் வரை பேரம் பேசிய நிலையில், புரோக்கர்கள் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது எந்த வேலையும் செய்ய முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் தவித்து வருகிறார்.
மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் கிட்னியை சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிலையில், தற்போது கல்லீரலைக் குறிவைத்து தனது கைவரிசை காட்டி வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.