10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டனூரில் பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ராமதாஸ் கட்சியின் தலைவராகச் செயல்படுவதை அங்கீகரிப்பது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க 16 குற்றச்சாட்டுகளுடன் கூடிய அறிக்கையை ராமதாசிடம் சமர்பித்தனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ஒரு சமுதாயத்திற்காக மட்டும் இங்குத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தார். இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமானது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டுமென்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.