பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து ஆயுத விநியோகம் செய்து வரும் சீனா, அந்நாட்டிற்கு 3- வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், சீனாவின் இந்த செயல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே ராணுவ மோதல் மூண்ட நிலையில், இந்தியாவின் எல்லை மாநிலங்களில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியது.
ஆனால் அவை அனைத்தும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் திறம்பட முறியடிக்கப்பட்டன. மற்றொருபுறம் இந்திய ராணுவம் ஏவிய ஏவுகணைகளும், ட்ரோன்களும் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சீர்குலைத்து, அந்நாட்டின் விமானப்படைத் தளங்களையும் சேதப்படுத்தின. தொடர்ந்து 4 நாட்கள் நீடித்த மோதல் பாகிஸ்தானின் சிரம் தாழ்ந்த கோரிக்கையை ஏற்று நிறுத்தப்பட்டது. சீனாவுடன் ராணுவ ரீதியாக உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாக, இந்த மோதலின்போது சீன தயாரிப்பு ஆயுதங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயற்கைக்கோள் ரீதியிலான ஆதரவைச் சீனா வழங்கியதாகவும், சீன ஆயுதங்கள் சராசரிக்கும் குறைவாகச் செயல்பட்டதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இந்தியப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சீன தயாரிப்பான PL-15E என்ற அதிநவீன ஏவுகணை பாகத்தின் புகைப்படத்தை அதிகாரிகள் வெளியிட்டனர். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானின் பிரதான ஆயுத கொள்முதல் நாடாகச் சீனா உள்ளது.
குறிப்பாகக் கடந்த 2020 முதல் 2024-ம் ஆண்டு வரை சுமார் 81 சதவீத ஆயுதங்களை பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. இதற்கிடையே இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா அதன் ஆதிக்கத்தை உணர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இஸ்லாமாபாத்தை வலுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானிலுள்ள க்வாடார் துறைமுகத்தைச் சீன கடற்படை கட்டி வருகிறது. அதேபோல, பாகிஸ்தானின் கடற்படையை வலுப்படுத்தும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் 4 அதிநவீன போர் கப்பல்களைச் சீனா வழங்கியுள்ளது.
இது தவிரப் பாகிஸ்தானுக்கு 8 ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பல்களை வழங்கவுள்ள சீனா, அதில் 2-வது நீர்மூழ்கி கப்பலை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியுள்ளது. அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, கடந்த 14-ம் தேதி சீனாவில் உள்ள ஹீபே மாகாணத்தின் வுஹானில் 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய பாகிஸ்தான் கடற்படை வைஸ் அட்மிரல் அப்துல் சமத், ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலின் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட சென்சார்கள், பிராந்திய அளவில் சமநிலையை நிலைநிறுத்துவதற்கும், கடல்சார் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் கருவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து உளவு கப்பலான ரிஸ்வான், 600-க்கும் மேற்பட்ட VT-4 பீரங்கிகள், 36 J-10CE 4.5 ஜெனரேஷன் போர் விமானங்கள், JF-17 போர் விமானங்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் – சீனா இடையே நடைபெற்று வரும் இந்த விநியோகங்களை இந்திய அரசு உன்னிப்பாகக் கவனிக்கும் என்பதில் சந்தேகமில்லை.