அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த பில்லியனர்களுக்கான பட்டியலில், தைவான் மற்றும் இஸ்ரேலை பின்னுக்கு தள்ளி, 12 கோடீஸ்வரர்களுடன், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
உலகின் 78 நாடுகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பில்லியனர்கள் உள்ளனர். அவர்களின் மொத்த நிகர மதிப்பு 16.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அவர்களுள் மூன்றில் ஒரு பங்கு பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
செல்வந்தர்களுக்கான இடம்பெயர் மையமாக உள்ள அமெரிக்கா, 41 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 125 பில்லியனர்களை கொண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவர்கள் மொத்தமாக 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புள்ள செல்வத்தை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அமெரிக்காவில் வசிக்கும் உலகின் முதல் 3 பில்லியனர்களும் வெளிநாட்டில் பிறந்தவர்களே என்கிறது ஃபோர்ப்லின் ஆய்வறிக்கை.
குறிப்பாக உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் தென் ஆப்ரிக்க நாட்டில் பிறந்தவர். அடுத்த இடத்திலுள்ள கூகுல் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் ரஷ்யாவைச் சேர்ந்தவர். அதேபோல, என்விடியா தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங் தாய்வானைச் சேர்ந்தவர்.
கடந்த 2022-ம் ஆண்டு வரை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த பில்லியனர்களுக்கான பட்டியலில், தைவான் மற்றும் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி இந்தியாவை முதன்மை நாடாக மாற்றியுள்ளது.
உலகளவில் 8-வது பணக்காரரும், சைபர் பாதுகாப்பு நிறுவனம் ZSCALER-ன் இணை நிறுவனருமான ஜெய் சவுத்ரி, 17.9 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிகர மதிப்புடன் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.
ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பாலோ ஆல்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிகேஷ் அரோரா உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் ஆய்வறிக்கையின்படி அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த பில்லியனர்களான 125 பேரில், 12 பேர் இந்தியாவிலும், தலா 11 பேர் இஸ்ரேல் மற்றும் தாய்வானிலும், 9 பேர் கனடாவிலும், 8 பேர் சீனாவிலும் பிறந்தவர்களாவர். அதேபோல, தலா 6 பேர் ஜெர்மனி மற்றும் ஈரானில் பிறந்தவர்கள் என்றும், 5 பேர் பிரான்ஸில் பிறந்தவர்கள் என்றும், தலா 4 பேர் ஹங்கேரி மற்றும் உக்ரைனில் பிறந்தவர்கள் என்றும் ஃபோர்ப்ஸ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.