மனித உடல் உறுப்பு திருட்டைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நோயாளிகளின் உடல் உறுப்புகளை மருத்துவர் எடுத்து தனது சொந்த தேவைகளுக்காக விற்பனை செய்வது கொடூரமானது என வேதனை தெரிவித்தனர்.
ஏழை எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாப்பது அரசின் கடமை எனவும் நீதிபதிகள் கூறினர்.
மனித உடலுறுப்புகளைப் பிற பொருட்களைப் போல விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல எனக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கிட்னி திருட்டு விவகாரத்தில் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
ஏழைக் குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் கிட்னி எப்போது திருடப்பட்டது என்பது கூட தெரியாமல் வாழ்வது எவ்வளவு பெரிய வேதனை எனக்கூறிய நீதிபதிகள், கிட்னி திருட்டு வழக்கில் தமிழக சுகாதாரத் துறையின் தலைமைச் செயலர், ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கிட்னி திருட்டு மற்றும் மனித உடல் உறுப்புகள் திருட்டைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாகத் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.