டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கலந்தாலோசிக்கும் பொருட்டு ஜிஎஸ்டி கூட்டம் இன்று தொடங்கவுள்ளது.
சுதந்திர தினத்தன்று டெல்லியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி பண்டிகைக்கு முன் ஜிஎஸ்டி வரிமுறையில் பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனவும், இதன் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை குறையும் என்றும் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து ஜிஎஸ்டி வரிமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வர ஜிஎஸ்டி கழகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
குறிப்பாக 5 மற்றும் 18 சதவீதம் என இரு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கலந்தாலோசிக்கும் வலையில் ஜிஎஸ்டி கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கவுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தப் பரிந்துரைகள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைக்கவுள்ளார்.
தொடர்ந்து புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிப்பது, காம்பன்சேஷன் செஸ் வரியை நீக்குவது, காப்பீடு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.