மும்பையில் மேம்பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்தபோது மோனோ ரயில் திடீரென செயலிழந்த நிலையில், அதில் சிக்கித் தவித்த 582 பயணிகளும் கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள மைசூரு காலனி ரயில் நிலையம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற மோனோ ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேம்பாலத்தின் மீது செயலிழந்து நின்றது.
இதனால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மோனோ ரயில் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ராட்சத கிரேன் உதவியுடன் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் ரயிலில் இருந்த 582 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், ரயிலினுள் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் எனப் பல தரப்பட்ட மக்கள் இருந்ததாகவும், ரயிலுக்குள் முச்சு விடுவது பெரும் சவாலாக இருந்ததாகவும், மீட்கப்பட்ட பயணிகள் தெரிவித்தனர்.