டிரம்பின் வரி மிரட்டலையும் மீறி ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்குக் குத்தகைக்கு நிலம் எடுத்துள்ளது.
ஆப்பிள் இந்தியா நிறுவனம் பெங்களூருவில் உள்ள எம்பஸி ஜெனித் என்ற வணிக வளாகத்தில் 2.7 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலக இடத்தை 10 ஆண்டுக் கால குத்தகைக்கு எடுத்துள்ளது.
எம்பஸி குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த அலுவலகத்தின் குத்தகை மதிப்பு 1,000 கோடிக்கும் அதிகமாகும். இது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்பிள் நிறுவனம் அந்த கட்டிடத்தில் ஐந்தாவது தளத்திலிருந்து 13-வது தளம் வரை, ஒன்பது தளங்களை தனது தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மாதாந்திர வாடகை 6 கோடியே 31 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 4.5% வாடகை உயர்வு இருக்கும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.