ஸ்வீடனில் மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயத்தை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் வடக்கே உள்ளது கிருனா நகரம். 9 ஆயிரத்து 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகரில், 23 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். இந்த நகருக்கு அருகே நான்காயிரம் அடி ஆழத்தில் மிகப்பெரிய அளவில் இரும்பு தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்குள்ள வீடுகள் உள்ளிட்டவை அருகே புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் 1912ல் மரத்தால் கட்டப்பட்ட 672 டன் எடையுள்ள தேவாலயம் ஒன்று 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணி தொடங்கி உள்ளது.
பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட மிக நீண்ட டிரக்கில் வைக்கப்பட்டுள்ள தேவாலயத்தைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர்.