குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பள்ளியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தின் கோகாரா பகுதியில் SEVENTH DAY என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குப் பயிலும் பத்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பத்தாம் வகுப்பு மாணவரை எட்டாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் காவல்துறையை வரவழைத்துள்ளனர்.
எட்டாம் வகுப்பு மாணவர் பள்ளிக்குள் ஆயுதம் கொண்டு வந்தது எப்படி என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த படுகொலை சம்பவம் கோகாரா பகுதியைப் போர்க்களமாக மாற்றியது. உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பொருட்களைச் சூறையாடினார்.
இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நிலவியது. கொலையாளியைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.