திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன், ஒரு வாரம் கழித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
துரிஞ்சாபுரம் அடுத்த காட்டுப்புத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் கமலேஷ் என்ற மாணவன், அரசு பேருந்தில் கடந்த 12ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றுள்ளார்.
கருந்துவம்பாடியில் இருந்து காட்டுப்புத்தூர் வரும் வழியில் பேருந்தின் கதவுகள் மூடாமல் இருந்துள்ளது. அப்போது வளைவில் வேகமாகத் திரும்பியதால் பேருந்தின் உள்ளே இருந்த மாணவன் கமலேஷ், சாலையில் விழுந்துள்ளார்.
இதையடுத்து சக மாணவர்கள் ஓடிச் சென்று கமலேஷை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில், ஒரு வாரம் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி, மாணவன் கமலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.