ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த போக்கு ஆபத்தானது எனப் பலரும் எச்சரித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பல ஆண்டுகளாகவே ஆப்கானின் குறித்து உலக நாடுகள் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளன. பயங்கரவாதம், வன்முறை, கருத்துரிமை மறுப்பு, பெண் உரிமை பறிப்பு, உரிய விசாரணையே இல்லாமல் கடுமையான தண்டனை உள்ளிட்டவை அந்த எதிர்மறையான பார்வைக்கு முக்கிய காரணமாக உள்ளன.
தாலிபான் ஆட்சி வந்தவுடன், ஆப்கான் மக்களே ஆப்கானை விட்டு கூட்டம் கூட்டமாகத் தப்பியோடியதை நாம் பார்த்தோம். அந்த அளவுக்கு ஆபத்து நிறைந்த நாடாக ஆப்கான் கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானியர்களுக்கே ஆப்கான் கொடுங்கனவாக உள்ளது என்றால், மற்ற நாட்டு மக்களின் மனநிலையை விவரிக்கத் தேவையில்லை. இதனால், அந்நாட்டின் சுற்றுலாத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இந்த நிலையை மாற்றி ஆப்கானிஸ்தானுக்குச் சுற்றுலாப் பயணிகளை வரவைக்க தாலிபன் அரசு தற்போது புதிய யுக்தியைக் கையில் எடுத்துள்ளது. உலகளவில் பிரபலமாக உள்ள influencer-களை வரவைத்து, அவர்களைக் கொண்டு விளம்பர வீடியோக்களை வெளியிடுவதுதான் அந்த புதிய யுக்தி.
“ஆப்கானிஸ்தானில் நான் ராணியைப் போல நடத்தப்பட்டேன்.” “தாலிபான்கள் மிகச் சிறந்த ஆட்சி வழங்கி வருகிறார்கள்.” “ஆப்கான் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.” “ஆப்கானில் பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை” – என influencer-கள் வாங்கிய காசுக்கு மேலாக,ஆப்கானில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக வர்ணித்துத் தள்ளுகிறார்கள்.
அண்மையில் தமிழகத்தில் கூமாபட்டி குறித்து ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கூமாபட்டியை நோக்கிப் படையெடுத்த சம்பவம் நினைவிருக்கலாம். அதேபோல், இந்த influencer-கள் வெளியிட்ட வீடியோக்களின் பலனாக, பல்வேறு பயணிகள் ஆப்கானுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆப்கான் சுற்றுலாத்துறை அமைச்சர் குத்ரதுல்லா ஜமாலின் தெரிவித்த தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 3 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆப்கான் சென்றுள்ளனர். கடந்தாண்டு முழுவதுமே சேர்த்து வெறும் 9000 பயணிகள் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், ஆப்கானுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதனையும் மீறி பலர் ஆப்கானுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இவை அனைத்திற்கும் influencer-கள் வெளியிட்ட வீடியோக்களே காரணம்.
influencer-களின் இந்த செயலுக்குப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆப்கான் ஆட்சியில் பெண்களின் நிலை கீழான நிலைக்குச் சென்றுள்ளது. பெண்களின் கல்வி கற்கும் சுதந்திரமும், பொது இடங்களில் நடமாடும் சுதந்திரமும் கிட்டதட்ட பறிக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் நீடிக்கிறது. மனக்குமுறலை வெளிப்படுத்தக்கூட முடியாத நிலையில் அந்நாட்டு மக்கள் உள்ளனர்.
நிலைமை இப்படி இருக்க, ஆப்கானிஸ்தானின் உண்மை முகத்தை மறைத்துவிட்டு, கவர்ச்சியை மையப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது ஆபத்தானது என அவர்கள் எச்சரிக்கின்றனர். influencer-களின் வீடியோக்களை நம்பாமல், உண்மை நிலையை விசாரித்து விட்டு ஆப்கானுக்குப் பயணிக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.