அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
முதலில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து, இருநாட்டு வர்த்தக உறவு குறித்து ஜெய்சங்கர் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் இந்தியா அதிக கச்சா எண்ணெய் வாங்கவில்லை எனவும், சீனாவும் ஐரோப்பிய நாடுகளுமே ரஷ்யாவிடம் அதிகமாக வர்த்தகம் செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதினை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். உலகளாவிய நிலைமை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதினுடன் விவாதித்ததாகவும், வருடாந்திர உச்சி மாநாட்டிற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.