ஆத்தூர் அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அரசு ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் கட்டுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே சீவல் சரகு ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட ராஜகம்பள சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த சமுதாய மக்கள் திருவிழா நடத்துவதற்காக 13 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை முன்னோர்கள் எழுதி வைத்துள்ளதாகவும், 1922 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே கோயில் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கோயில் நிலத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் துணையுடன் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான பணியை அரசு தொடங்கியுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோயில் பகுதியில் திருவிழா நடத்த முடியாதபடி அரசு தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கட்டுமான பணிகள் நீடித்தால் உள்ளூர் மற்றும் வெளியூரில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.