தெரு நாய்களை காப்பகத்தில் அடைத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
நாடு முழுவதும் வெறிநாய்கடியால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல அலுவலர்கள் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனு கடந்த 13ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை நியமித்தார்.
அதன்படி, இந்த வழக்கில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா அமர்வு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
ஆக்ரோஷமான, ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும் என்றும், தெரு நாய்களை பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களை தடுப்பவர்களுக்கு 25 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆணையிட்டனர்.
டெல்லியில் பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கத் தடை விதித்த நீதிபதிகள்,
தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
வேறு இடங்களில் உணவு அளிப்போர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம் என்றும்,
தெருநாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், அனைத்து உயர்நீதிமன்றங்களில் உள்ள, தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.