பெரம்பலூர் மாவட்டம் லப்பைக் குடிக்காடு பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் ஒரே நாளில் 9 குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூரில் வெறிநாய்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், கடைவீதி பகுதி, அரங்கூர் பிரிவு, ஜமாலியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களையும், குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்தன. வீட்டின் முன்பாக விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் என ஒரே நாளில் 9 பேரை தெருநாய்கள் கடித்து குதறின.
இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என லப்பைக் குடிக்காடு மக்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக இதே பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கால்நடைகளை தெருநாய்கள் கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது.