திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்து தமிழ் ஜனம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதிலளிக்க முடியாமல் திணறினார்.
திருநெல்வேலியில் புதிய மருத்துவத் திட்டங்களைத் தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் நலனுக்காகக் கூடுதலாக ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்படும் என்று உறுதியளித்து ஓராண்டுகளை கடந்த பின்பும் தற்போது வரை நிறைவேற்றப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மழுப்பலாக பதிலளித்த அமைச்சரிடம், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மண்டலம் செயல்பட்டு வருகின்ற நிலையில் அங்கு எலும்பு மஞ்சை நோய்க்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து தமிழ் ஜனம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் அதற்கு பதில் தெரியாமல் மருத்துவமனையின் முதல்வர் ரேவதி பாலனை அமைச்சர் அழைத்தார். ஆனால் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாகவே அவர் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
மேலும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 1.18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருந்த கட்டண வார்டானது தற்போது வரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது குறித்த கேள்விக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.