சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் மனைவியை இழந்த கணவரும், தாயை இழந்த இரண்டு குழந்தைகளும் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்துவரும் நிலையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் கால்வைத்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வழக்கமாக தனது பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வருவார் என காத்திருந்த அவரின் உடல்நிலை சரியில்லாத கணவருக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் வரலட்சுமியின் இழப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணகி நகர் மட்டுமல்ல அதன் அருகில் உள்ள எழில் நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் மக்கள் அதிக நெருக்கடியில் வசிக்கும் பகுதிகளாக உள்ளன. நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் கண்ணகி நகரில் குடிநீர், சாலை உள்ளிட்டவைகளும் மின்சார வசதியும் முறையாக கிடைப்பதில்லை என்ற புகார் பல மாதங்களாகவே நீடித்து வருகிறது.
வரலட்சுமியின் உயிரை பறித்த மின்கம்பி கடந்த ஒருவாரமாக அறுந்து கிடந்த நிலையில் அது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரியம் அலட்சியமாகவே செயல்பட்டடதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள், பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் என நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர் கடந்து செல்லும் பாதையில் ஆங்காங்கே அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை கடந்து செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
மின்வாரியத்தை நேரில் தொடர்பு கொண்டு புகார் அளித்தாலும், தொலைபேசி மூலமாக புகார் அளித்தாலும் வருகிறோம் வருகிறோம் என சொல்கிறார்களே தவிர இதுவரை யாரும் வரவும் இல்லை, சரியும் செய்யவில்லை என பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்
தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை கூட வழங்காமல் அவர்களை மழைக்காலத்தில் பணியில் ஈடுபடுத்துவதே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என்ற புகாரும் எழுந்துள்ளது.
ஏற்கனவே தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் மூலம் பெரிய அதிருப்தியை சந்தித்த திமுக அரசுக்கு, தற்போதைய தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவசர அவசரமாக அமைச்சர் மா சுப்பிரமணியன் மூலம் 20 லட்ச ரூபாய் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. அந்த நிவாரணத்தை வழங்க வந்த அமைச்சர் மா சுப்பிரமணியனை வளைத்து அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்
தூய்மைப் பணியை பார்த்து அதில் வரும் வருமானத்தை பயன்படுத்தி உடல்நலன் சரியில்லாத தன் கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்த்து வந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உயிரிழப்புக்கு 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ற கேள்வியை சக தூய்மைப் பணியாளர்களும் பொதுமக்களும் எழுப்பியுள்ளனர்.
சேதமடைந்த நிலையில் குடியிருப்புக் கட்டடங்கள், லேசான மழை பெய்தாலே சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர், ஆங்காங்கே ஆபத்தான நிலையில் அறுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகள் என பொதுமக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் கண்ணகிநகர் காட்சியளிக்கிறது.
வரலட்சுமியின் உயிரை பறித்த மின்சாரக் கம்பிகள் மேலும் ஒரு உயிரை பறிப்பதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு, அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.