பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார் மற்றும் மினி பேருந்துகளின் ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், பழனி அடிவாரம் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கிரிவலப் பாதை மற்றும் மின் இழுவை ரயில் நிலையத்திற்கு செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படுவதால் வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் சிரமமின்றி சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பெரும் வணிக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் சார்பில் தற்போது வரை வழங்கப்பட்டுள்ள பேட்டரி கார்கள் மற்றும் மினி பேருந்துகளை வரிசையாக இயக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிரிவல பாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் ஆணையர், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.