இந்தியாவின் வான் பரப்பை பாதுகாப்பதற்கான ‘சுதர்ஷன் சக்ரா’ மிஷன் 2030ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என, DRDO அமைப்பின் இயக்குநர் ஜெனரல் பி.கே.தாஸ் தெரிவித்துள்ளார். இதன் சிறப்பம்சங்கள் என்ன? விரிவாக பார்க்கலாம்..
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, கிருஷ்ண பகவானின் ஆயுதமான சுதர்ஷன் சக்ராவின் பெயரில் புதிய வான் பாதுகாப்பு திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார். எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பது மட்டுமின்றி, அவர்கள் மீது துல்லியமான தாக்குதலையும் சுதர்ஷன் சக்ரா நடத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்தியாவின் புதிய வான் பாதுகாப்பு திட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இஸ்ரேலின் Iron Dome போன்று, இந்தியாவின் வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பாக சுதர்ஷன் சக்ரா உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த திட்டம் குறித்து DRDO எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் பி.கே.தாஸ் விளக்கம் அளித்துள்ளார். 2030ம் ஆண்டுக்குள் சுதர்ஷன் சக்ரா என்ற ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதில் உள்ள சென்சார் அமைப்பு நீண்ட தொலைவில் உள்ளவற்றையும் கண்டறியும் எனவும், கண்களுக்குப் புலப்படாத நீண்ட அலைநீளம் கொண்ட அகச்சிவப்பு கதிர்வீச்சை இவை கொண்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தாக்க வரும் ஏவுகணைகளின் வேகம், தாக்குதலின் வீரியம் உள்ளிட்டவற்றை சுதர்ஷன் சக்ரா துல்லியமாக கணிக்கும் என குறிப்பிட்டுள்ள பி.கே.தாஸ், பல்வேறு வகையான பதில் தாக்குதல்களை இதனால் தர முடியும் என தெரிவித்துள்ளார்.
சுதர்சன் சக்ராவை உருவாக்க இந்திய தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் உதவி பெறப்படும் எனவும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒத்துழைப்பு பெறப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் சுதர்ஷன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்பின் துல்லிய தன்மையை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக DRDO இயக்குநர் ஜெனரல் பி.கே.தாஸ் தெரிவித்துள்ளார்.
சுதர்ஷன் சக்ராவின் வருகை இந்திய ராணுவத்தின் மணிமகுடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.