உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதன தர்மத்தின் எதிர்ப்பாளரான தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், உலக ஐயப்ப சங்கம மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தது, இந்துக்களை அவமதிப்பதற்குச் சமம் எனக் கூறினார்.
சபரிமலை பாரம்பரியத்தையும், ஐயப்ப பக்தர்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவமதித்து விட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் இந்துக்களையும், இந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள் என சுட்டிக்காட்டினார்.
இந்துக்களை அவமதித்துவிட்டு தற்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வருவதாகவும் அவர் கூறினார். வாக்கு வங்கிக்காக இண்டி கூட்டணி, சபரிமலை நிகழ்ச்சிக்கு வருவது, ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவது போன்றது எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், இது தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாளாக்கும் செயல் என்பதை கேரள மற்றும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.