கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில், ஊழியரை மதுபோதையில் தாக்கிய ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 12ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 11ஆம் தேதி பரங்கிமலை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீனா, மேடவாக்கம் ஊராட்சி பணி மேற்பார்வையாளர் ராஜேஷ் ஆகியோர் கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது, ஊராட்சி செயலர் மதுபோதையில் இருந்ததை அறிந்த அவர்கள், மது அருந்திவிட்டு ஊராட்சி அலுவலகத்தில் இருப்பது தவறு என சுட்டிக்காட்டினர். இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சி செயலர் ஏழுமலை, பணி மேற்பார்வையாளர் ராஜேஷை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
மேலும், ஊராட்சி மன்ற தலைவர்தான் அடிக்க சொன்னதாகவும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், ஊராட்சி செயலர் ஏழுமலையை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.