உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்றாக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ககன்யான் திட்டத்திற்காக விண்வௌி செல்லும் வீரர்களுக்கான பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு வீரர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் குரூப் கேப்டன்களான சுபான்ஷு சுக்லா, பி.வி.நாயர், அஜித் கிருஷ்ணன் மற்றும் அங்கத் பிரதாப் ஆகியோரைப் பாராட்டினார். விண்வெளி ஆராய்ச்சியில் உயரும் லட்சியங்களை உள்ளடக்கிய இந்தியாவின் பெருமை ககன்யான் வீரர்கள் என பெருமிதம் தெரிவித்தார்.
சந்திரனின் பயணங்கள் முதல் செவ்வாய் ஆய்வு வரை இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணத்தை எடுத்துரைத்த அவர், ககன்யான் திட்டம் சுயசார்பு இந்தியாவின் புதிய அத்தியாயம் என குறிப்பிட்டார். மேலும், விண்வெளியை வெறும் ஆராய்ச்சி துறையாக கருதாமல், பொருளாதாரம், பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலமாக பார்க்கப்படுவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.