மருத்துவத் துறையில் நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று நடைமுறையில் சாத்தியமாகி உள்ளது. புற்றுநோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன், முதல் கட்டப் பரிசோதனைகள் வெற்றிப் பெற்றுள்ளன. இந்தப் புதிய தடுப்பூசி, புற்றுநோயாளிகளுக்குப் புது நம்பிக்கையை அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1990 மற்றும் 2013ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2020ம் ஆண்டில், இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இது அடுத்த இரண்டாண்டுகளில் 14 லட்சத்துக்கும் அதிகமானது. இந்த ஆண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக சராசரியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 12.8 சதவீதமாக அதிகரிக்கிறது என்று பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில், சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் சுமார் 6 லட்சம் பேர் புற்றுநோயால் மரணமடைவதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிப்பதில் உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்படும் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், முதற்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
பரிசோதனை செய்யப்பட்ட எட்டு நோயாளிகளுக்குப் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சி தடுக்கப் பட்டதாகவும், உடலின் வேறு இடங்களில் புதிய கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என்பது உறுதி செய்யப் பட்டது.
இதுவரை, உலகில் புற்றுநோய்களில் வெளிப்படுத்தப்படும் பொதுவான புரதங்களை குறிவைத்து அழித்தல் மற்றும் ஒரு நோயாளியின் புற்றுநோய் கட்டியுடன் பொருந்தக்கூடிய தடுப்பூசியைப் பிரத்யேகமாக உருவாக்குதல் ஆகிய இரண்டு முறைகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய முறையைக் கண்டுபிடித்துள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், எலிகளில் உள்ள கட்டிகளை வெற்றிகரமாக அகற்றி mRNA தடுப்பூசி சிகிச்சையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.
இந்தச் சிகிச்சை, குறிப்பிட்ட கட்டி புரதங்களைக் குறிவைக்கும் பாரம்பரிய புற்றுநோய் தடுப்பூசிகளைப் போலல்லாமல், இந்த புதிய அணுகுமுறை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைச் சீர்செய்து புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கிறது.
ஒரு வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவது போல் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புதுப்பிப்பதன் மூலம், புற்று நோய் கட்டியை அகற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வகையான புற்றுநோய் கட்டிகளை அகற்ற நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புதுப்பிக்கும் இந்த மருத்துவக் கண்டுபிடிப்பு, அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற கஷ்டமான சிகிச்சைக்கு நல்ல மாற்றாக இது அமைந்துள்ளது.
உலகளாவிய புற்றுநோய் தடுப்பூசிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் புதிய வழிகளைத் திறந்து வைத்துள்ளது.