திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். நோயாளிகளின் வருகை அதிகரித்ததால், சில மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் இல்லாததால், மேல்சிகிச்சைக்காக நோயாளிகள் திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக புகார் எழுந்தது.
திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் எலும்பு முறிவு மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், போதிய உபகரணங்கள் இல்லாததால் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் உடனடியாக போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும், அறுவை சிகிச்சையை அங்கேயே மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.