சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
அகில இந்திய சட்டசபை சபாநாயகர் மாநாட்டை டெல்லி சட்டப்பேரவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் 29 மாநிலங்களின் சபாநாயகர்கள் மற்றும் 6 யூனியன் பிரேத மாநிலங்களின் மேலவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய அமித்ஷா, மத்திய சட்டமன்றத்திற்குத் தலைமை தாங்கிய முதல் சபாநாயகர் விட்டல்பாய் படேலின் நூற்றாண்டு விழாவை கொண்டாட டெல்லி பேரவையில் அனைவரும் ஒன்று கூடியது மகிழ்ச்சியான தருணம் என கூறினார்.
நாட்டு மக்களின் பிரச்னைகளை எழுப்புவதற்கு சட்டசபைகள் பாரபட்சமற்ற தளமாக இருக்க வேண்டுமென கூறிய அவர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேர்மையான வாதங்களை முன்வைப்பதை சபாநாயகர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் மாநில சட்ட சபைகளின் செயல்பாடுகள், சட்டப்படி நடப்பதை சபாநாயகர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அமித்ஷா அறிவுறுத்தினார்.