குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் சென்னை வானகரத்தில் ஞானாக்னி அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு போட்டிகளின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் திறமையை வெளிபடுத்த உதவிய கலாம் 2047 நிகழ்ச்சி குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கனவு காணுங்கள்… ஆனால் கனவு என்பது நீங்கள் தூங்கும் போது வருவதல்ல உங்களை தூங்க விடாமல் செய்வதே கனவு என்ற குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்பத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஞானாக்னி அறக்கட்டளை மாணவர்களுக்கான விழாவை நடத்தி வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அப்துல்கலாம் சொன்ன கனவை காண வைப்பதற்கும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கும் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடப்பாண்டு சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மகாலில் நடைபெற்ற இவ்விழாவில் ஞானாக்னி அறக்கட்டளை தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ பிரகாஷ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி, பேச்சுப்போட்டி, கட்டூரைப் போட்டி, கவிதைப் போட்டி தெரு நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாம் 2047 நிகழ்ச்சி தங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்திருப்பதாக நடனப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.
அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் மின்சாரம் தொடர்பாகவும், பனித்துளியில் இருந்து தண்ணீரை தனியாகப் பிரிப்பது குறித்தும் தங்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தினர். அதிலும் பார்வையற்றவர்கள் விபத்தில் சிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ள கிளாரா ஸ்டிக் கண்டுபிடிப்புப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இது தவிர்த்துக் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் தமிழகம் முழுவதிலுமிருந்து வருகை தந்திருந்த மாணவ, மாணவியர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். போட்டியில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய 100 மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன அப்துல்கலாம் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அறிவியல் பூர்வீகமாகவும், கலை மூலமாகவும் இது போன்ற போட்டிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அறக்கட்டளைக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் உட்பட அனைவரும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.