அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அண்மையில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்தது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் 100 டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு பிறப்பித்த நிர்வாக உத்தரவிலும் கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவானது வரும் 29ம் தேதி அமலுக்கு வருகிறது. இதையடுத்து, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்திருக்கிறது. மேலும், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும், அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், நாடு சார்ந்த சர்வதேச அவசர பொருளாதார சக்தி சட்டத்தின் (IEEPA) கட்டண கட்டமைப்பின்படி சுங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.
இருப்பினும், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்குத் தொடர்ந்து வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.புதிய விதிமுறைகளின் காரணமாகச் சரக்குகளை ஏற்க முடியாது என்று அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களின் நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளன.