இந்தியாவில் பால் சாம்ராஜ்யத்தை உருவாக்கி, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு பிராண்ட் என்றால் அது அமுல் நிறுவனம்… அந்நிறுவனத்தின் ஆரம்ப காலம் தொட்டு தற்போதுவரைப் பிராண்டாக உள்ள அழகிய கார்ட்டூன் பற்றிய விவாதங்கள் இணையதளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அது என்ன என்பதைத் தற்போது பார்க்கலாம்.
கொழு கொழு என்ற குழந்தைகளைப் பார்த்தால் அமுல் பேபி என்று செல்லமாக அழைப்பது மக்களிடையே சர்வசாதாரணமாக மாறியதற்குக் காரணம் அமுல் நிறுவனம். அந்நிறுவனத்தின் பிராண்டாகவே மாறிவிட்ட சிறுமியின் கார்ட்டூனும், அதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களும்தான் இதற்கான ஆணிவேர். அந்த அளவுக்கு மக்கள் மனதிற்கு மிக நெருக்கமாகிவிட்டது இந்தக் கார்ட்டூன்.
1946-ம் ஆண்டிலிருந்து அமுல் நிறுவனத்தின் கதைத் தொடங்கினாலும், 1955-ம் ஆண்டுதான் அமுல் என்ற பிராண்டின்கீழ்ப் பால் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன… தனது பிராண்டை மக்களிடையே எளிதாகக் கொண்டுசேர்க்க முதலில் குழந்தையின் புகைப்படத்தை மாடலாகப் பயன்படுத்தியது. தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அமுல் கேர்ள் கார்ட்டூன் கதாபாத்திரம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
blue-hair, red polka-dotted dress அணிந்திருக்கும் தனித்துவமான அமுல் கேர்ள் MASCOT, யாரை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரின் இரண்டு சகோதரிகளான ஷோபா மற்றும் ஸ்மிதா ஆகியோர்ப் புகைப்படங்கள்தான் அமுல் பிராண்ட் பால் டப்பா விளம்பரங்களை முதலில் நிறைத்திருந்தது.
இந்திய விளம்பரங்களில் நீண்ட காலம் பிரபலமாக இருக்கும் அமுல் கேர்ள் சின்னம், அந் நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவதற்கு ஒரு காரணமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், நிறுவனம் வெற்றிப் பெற அமுல் கேர்ள் கார்ட்டூன் மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இருக்கும் சந்தைப்படுத்துதல் உத்தியும் காரணம் என்று சந்தை ஆலோசகரான டாக்டர்ச் சஞ்சய் அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
1960ம் ஆண்டுகளில் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய போல்சன் நிறுவனத்துடன் போட்டியிட அமுலின் விளம்பரப் பிரிவு தலைவர்ச் சில்வெஸ்டர் டா குன்ஹா, தனித்துவமான சின்னத்தை உருவாக்க முடிவு செய்ததாக அரோரா கூறியுள்ளார். 1966ஆம் ஆண்டில், 700 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை மதிப்பாய்வு செய்து கொண்டிருந்த சில்வெஸ்டர் டா குன்ஹாவுக்கு, கேரளாவைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்ச் சந்திரன் தரூரின் குழந்தைகளின் படங்கள் கிடைத்ததாகவும், குதிரைவால் அணிந்திருந்த அந்த 10 மாத குழந்தைதான் ஷோபா தரூர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதோடு, சசி தரூரின் சகோதரியான ஷோபா தரூரின் கவனத்தையும் ஈர்த்தது. இது குறித்து எக்ஸ் தளத்தில் எழுதிய ஷோபா தரூர், குழந்தையாக இருந்தபோது அமுல் விளம்பரத்தில் இடம்பெற்றதை நினைவுகூர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தைப் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஷ்யாம் பெனகல் எடுத்திருந்தார் என்றும், அமுல் நிறுவனத்தின் வண்ண விளம்பரத்தில், தனது சகோதரியான ஸ்மிதா தரூர் இடம் பெற்றார் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், Eustace Fernandes உருவாக்கிய அமுல் கேர்ள் சின்னத்திற்கு முன்மாதிரியாகத் தாங்கள் இருந்தோம் என்பதை ஷோபா தரூர் உறுதிபடுத்தவில்லை.
இதுதொடர்பாக அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமுல் கேர்ள் கார்ட்டூன் சித்தரிப்பு, ஓவியர்களான சில்வெஸ்டர் டாகுன்ஹா, மற்றும் யூஸ்டேஸ் பெர்னாண்டஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.