தலைக்கவசத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் சேலத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் தலைக்கவசச் சுத்திகரிப்பு இயந்திரத்தைத் தயார் செய்துள்ளனர். தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைப் போல சேலத்தில் அமலுக்கு வந்திருக்கும் தலைக்கவசச் சுத்திகரிப்பு இயந்திரம் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் பயணத்திற்குப் பயன்படுத்தும் வாகனங்கள் இருசக்கர வாகனங்களாகத்தான் இருக்கின்றன. அத்தகைய இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் போது தலையில் அணியும் தலைக்கவசங்களில் இருந்து பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் உருவாகி பல்வேறு விதமான பிரச்னைகளை உருவாக்குகின்றன.
அத்தகையைப் பிரச்னைகளுக்கும், தலையில் ஏற்படும் நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும் வகையில் அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தலைக்கவசச் சுத்திகரிப்பு இயந்திரத்தைச் சேலத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தளவாய்பட்டியைச் சேர்ந்த ராமர் மற்றும் லட்சுமணர் ஆகிய இரட்டையர்கள் சாப்ட்வேர் இஞ்சினியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். தங்களின் பணி நேரத்தைத் தவித்து மீதமுள்ள நேரத்தைப் பயன்படுத்தி எதாவது சாதிக்க வேண்டும் என்பதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ளது போன்ற தலைக்கவசம் சுத்திகரிப்பு இயந்திரத்தைத் தயாரிக்க முடிவு செய்த இரட்டையர்கள் அதைப் போலவே புதிய இயந்திரங்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கினர். தலைக்கவசம் மட்டுமல்லக் கார்பெல்ட், சீட் கவர்ப் போன்ற அடிக்கடி பயன்படுத்த கூடிய பொருட்களையும் சுத்தம் செய்யும் வகையில் இந்த இயந்திரத்தை இரட்டையர்கள் தயாரித்துள்ளனர்.்
தமிழக அரசின் அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட இந்த தலைக்கவசச் சுத்திகரிப்பு இயந்திரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பத்துரூபாய் செலுத்திவிட்டுத் தங்களின் தலைக்கவசங்களை இயந்திரத்தின் மீது வைத்தால் அதில் உள்ள அசுத்தங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.்
சேலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தலைக்கவசச் சுத்திகரிப்பு இயந்திரம் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே இந்த இயந்திரத்தைத் தயாரித்தவர்களின் நோக்கமாக உள்ளது. தங்களின் பணி நேரத்தைத் தாண்டி மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற இரட்டையர்களின் எண்ணம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.