110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அகற்றப்பட்ட பாலத்தின் பகுதிகளைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 110 ஆண்டுகள் பழமையான, இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற மத்திய அரசால் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலப்பரப்பை ராமேஸ்வரத்துடன் இணைக்கும் இந்தப் பாலம், தனது நீடித்த வலிமைக்குப் புகழ்பெற்றது. கடுமையான புயல்கள் உட்பட பல இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்ட இந்தப் பாலம், தற்போது பயன்பாட்டில் இல்லாததால் பராமரிப்பு செலவைக் கருத்தில் கொண்டு அகற்றப்படவுள்ளது.
இந்நிலையில், பாரம்பரியம் மிக்க இந்த அரிய பாலத்தின் பகுதிகளை அகற்றிய பின், அவற்றை அருங்காட்சியகமாக அமைக்க அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் மூலம் வருங்கால சந்ததியினர்ப் பாம்பன் ரயில் பாலத்தின் வரலாற்றுச் சிறப்பையும், அதன் பொறியியல் சாதனைகளையும் அறிந்துகொள்ள உதவும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.