மதுரையில் சிலம்பாட்ட போட்டியில் எத்தனைப் பெனால்டி கார்டு இருக்கும் என்பதைக் கூட தெரியாதவர்களை நடுவர்களாக நியமித்ததால் வீரர், வீராங்கனைகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் அளவிற்கான முக்கியமான போட்டியை அலட்சியத்துடன் நடத்திய விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டுத் திடலில் முதலமைச்சர்க் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்காக உசிலம்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வீரர், வீராங்கனைகள் காலை 6 மணிக்கே வருகைத் தந்து காத்திருந்தனர்.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடுவர்கள் வழங்கிய தவறான முடிவு அவர்கள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முறையிட்டுக் கேட்ட போது அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளித்ததை கண்டு கோபமடைந்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் வீரர்கள் நடத்திய பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்த நிலையில், 4 மணி நேரத்திற்குப் பின் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் பெயரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமான விளையாட்டாகக் கருதப்படும் சிலம்பத்திற்கு உரிய நடுவர்களை நியமிக்காதது வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
விதிமுறைகளைத் தெரியாத நடுவர்களை நியமித்தது சிலம்பாட்டத்தையும் அதன் பாராம்பரியத்தையும் இழிவுபடுத்துவது போல அமைந்ததாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலம்பாட்ட போட்டி குறித்து அனைத்து விதிமுறைகளும் தெரிந்த நடுவர் நியமிக்கப்பட்டால் மட்டுமே போட்டியில் கலந்து கொள்வோம் என வீரர், வீராங்கனைகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
ஆனால் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளால் பெரும்பாலான மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் போட்டியில் கலந்து கொள்ளாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். விளையாட்டு வீரர்களுக்கான குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தராத அதிகாரிகளிடம் அது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அலட்சியத்துடன் பதிலளித்தது கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மாவட்ட அளவில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளிலேயே இத்தனைக் குளறுபடிகள் ஏற்படும் நிலையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகள் எப்படி நியாயமான முறையில் நடைபெறும் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
தமிழையும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் சிலம்பாட்ட போட்டிகளை முறையான விதிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.