செல்ஃபி மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இளைஞர்களிடையே செல்ஃபி எடுக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் வீடியோக்களுக்காக இளைஞர்களின் ஆபத்தான சாகசங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த Barber Law Firm செல்ஃபி மரணங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. மார்ச் 2014 முதல் மே 2025 வரை, உலகளவில் செல்ஃபி தொடர்பான விபத்துக்கள் இந்தியாவிலேயே அதிகம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், இந்தியாவில் 271 செல்ஃபி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 214 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 57 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகள், பாறைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் போன்ற ஆபத்தான இடங்களுக்கு எளிதாக செல்வதும், சமூக ஊடகங்களின் உபயோகமும் விபத்துகள் நடக்க காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த பட்டியலில் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், ரஷ்யா, பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.