திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் பெருகி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமானஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக, தேசத்தின் மதிப்புமிக்க உயர் பொறுப்பான குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஒரு தமிழரை முன்மொழிந்துள்ள நமது பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி கூறும் விதமாக, தூத்துக்குடி காயல்பட்டினத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை மர்மநபர்கள் சிலர் கிழித்து நாசப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதும், பதாகைகள் கிழிக்கப்படுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
ஒருவேளை தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆளும் அரசே இதுபோன்ற சமூகவிரோத செயல்களைச் செய்யச் சொல்லி கூலிப்படைகளை ஏவுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, நமது பாரதப் பிரதமரை அவமானப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற சமூகவிரோத சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழால் இருக்க போதிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.