செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடுகள் கட்டமுடியாமல் தவித்து வருவதாகப் பழங்குடியின மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அத்தியூர் ஊராட்சியில், ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள ஓடையின் அருகே 15 பழங்குடியினக் குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் குடிசை வீடுகள் பாதிக்கப்படுவதால் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசின் இலவசத் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, 15 பழங்குடியினக் குடும்பத்தினருக்கும் வருவாய்த்துறைச் சார்பில் மாற்று இடத்தில் பட்டா வழங்கப்பட்டுத் தலா 5 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தொகுப்பு வீடு கட்ட பணி ஆணையும் வழங்கப்பட்டது.
ஆனால், பட்டா வழங்கப்பட இடத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அரசின் தொகுப்பு வீடு கட்டவிடாமல் மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர்.
எனவே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்னையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.