ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டின் 16 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தியா – ஜப்பான் 15வது ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டின் 16 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் நேரில் சந்தித்தனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா – ஜப்பான் நட்பின் முக்கிய தூணாக மாநில – மாகாண ஒத்துழைப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால்தான் 15வது ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டின் போது, அதற்கான தனி முயற்சி தொடங்கப்பட்டது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இருநாடுகளும் வர்த்தகம், புதுமை, தொழில்முனைவு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தொழில்நுட்பம் மற்றும் AI போன்ற எதிர்காலத் துறைகள் இருநாட்டுக்கும் பயனளிக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்..