சீனாவில் நடைபெறவுள்ள 2ம் உலகப்போரின் வெற்றித் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை 2ம் உலகப்போர் நடைபெற்றது. 6 ஆண்டுகளாக நடைபெற்ற அந்தப் போர், ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இந்த வெற்றித் தினம் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலகப்போரின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதற்காக, சீனாவில் மிகப்பெரிய அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெறும் வெற்றிக் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், உலகிற்குத் தனது ராணுவ வலிமை எடுத்துக்காட்டும் வகையில் சீனா இந்த அணிவகுப்பை மேற்கொள்ளவுள்ளது.
அணிவகுப்பில் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும், நூற்றுக்கணக்கான ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் இந்த அணிவகுப்பில், புதின், கிம் ஜாங் உன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். ஒரே மேடையில், சீன அதிபர், ரஷ்ய அதிபர், வடகொரிய அதிபர் தோன்றவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
இத்தகைய அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார். மேலும் 2 நாட்கள் அங்கு தங்கியிருந்தால், முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்வில் மோடி பங்கேற்க முடியும். ஆனால், மோடி அவ்வாறு செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஜப்பான்.
தொடக்கத்திலேயே கூறியதுபோல ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்ததால்தான் 2ம் உலகப்போரே முடிவுக்கு வந்தது. அந்தக் கொண்டாட்டம்தான் சீனாவில் நடைபெறவுள்ளது. அதில் மோடி கலந்துகொண்டால், ஜப்பானுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும். இந்தியா – ஜப்பான் இடையேயான உறவை அது பாதிக்கவும்கூடும்.
இந்தியாவின் நம்பகமான நாடுகள் குறித்து பட்டியலிட்டால், அதில் கட்டாயம் ஜப்பான் இடம்பெறும். ஆனால், சீனா அப்படியல்ல. எப்போது அது எல்லைப் பிரச்னையில் ஈடுபடும், பாகிஸ்தானுக்கு இன்னும் எத்தனை ஆயுதங்களை வழங்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் எப்படியெல்லாம் தடையாக இருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது.
எனவே, சீனாவின் அணிவகுப்பில் கலந்துகொண்டு அந்நாட்டிடம் நட்புகரம் நீட்டுவதைக் காட்டிலும், ஜப்பானுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல் இருப்பதே முக்கியம் என்பதை இந்தியா கவனத்தில் கொண்டு செயல்பட்டுள்ளதாக ராஜதந்திரிகள் கூறுகின்றனர்.