திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் காரணமாக ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் பஞ்சப்பூரிலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால் ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் தங்களுக்கு மட்டுமே பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
ஆனால் பஞ்சப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர் . இதில் அருண்குமார், ஷேக், ராம்குமார் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி
பாரதிதாசன், ஆனந்த்பாபு, முருகேசன், முருகன் மற்றும் தேசிய ராஜா ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மேலும் இரு தரப்பிலும் தலா 30 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.