உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில், ஆற்றில் மிதந்தவை பூவந்தி பகுதியில் பெறப்பட்ட மனுக்கள் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக செய்தி வெளியான நிலையில், மனுக்கள் எவ்வாறு ஆற்றில் வீசப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்த வருவாய் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கவனக்குறைவாக செயல்பட்டதாக திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமாரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அலுவலகத்தில் பணிபுரியும் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.